1960 இல் பாடசாலைகள், அரசாங்கப் பாடசாலைகளாகப் பொறுப்பேற்கப்படுவதற்கு முந்திய காலப்பகுதி.சிதம்பராவின் முகாமையாளராக மறைந்த தையல்பாகர் அவர்கள் இருந்தவேளையது. சிவகுரு வித்தியசாலையில் 3 ஆம் வகுப்பு சித்திபெற்ற பின்னர் அப்படியே ஒட்டு மொத்தமாக 4 ஆம் வகுப்பில் சிதம்பராவில் சேர்ந்து கொள்ளலாம்.
இரண்டு பாடசாலைகளும் ஒரே முகாமையாளரின் கீழே இயங்கியமையால் விடுகைப்பத்திரம் எடுப்பது – கொடுப்பது எனும் சங்கதிகள் எதுவும் அன்றில்லை. எல்லாம் தானகவே இடம்மாறி வந்துசேரும். நாம் மட்டும் தமிழ் பள்ளிக்கூடத்திலிருந்து (சிவகுரு) ஆங்கிலப் பாடசாலைக்கு (சிதம்பரா) இடம்மாறி உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
தடிப்பேனா
நாம் நான்காம் வகுப்பில் சேர்ந்த காலம். மேல் வகுப்புக்களில் நமது சொந்த பந்தங்கள் தடிப்பேனையுடனும் மைக்கூட்டுடனும் மாரடித்த காலமாக இருந்தது. அந்த நாளைய சிதம்பராவின் கட்டட அமைப்பு “T” வடிவில் மிக எளிமையாக இருந்தது.
வடக்கு தெற்காக இருந்த வால்பகுதி “முன் மண்டபம்”, கிழக்கு மேற்காக இருந்த நீண்ட பகுதி “நடு மண்டபம்”. முன் மண்டப முகப்பில் ஒரு காதோக்கு மரம். இரண்டு மண்டபங்களுக்கும் இடைப்பட்ட கிழக்குப் பகுதியில் ஒரு பலாமரம். பலாமரத்தின் கீழாகச் செல்லும் பாதை – ஒரு பழைய தகரக் கதவைத் திறந்தால் – ஒரு தச்சுப்பட்டறையில் முடிவடையும்.
சிதம்பரக் கல்லூரி
வருடம் 365 நாட்களும் இந்த தச்சுப்பட்டறையில் பாடசாலைகளுக்கு வேண்டிய தளபாடங்களின் தயாரிப்பு வேலைகள் நடந்தபடியே இருக்கும். மாணவர்களினால் சேதமாக்கப்பட்ட தளபாடங்களுக்கான திருத்த வேலைகளும் அங்கே தொடந்து நடைபெறும்.
தச்சுப்பட்டறையில் தயாராகும் அநேகமான வாங்குகள் இருவர் அல்லது நால்வர் அமரக்கூடிய வாங்குகளாகவே இருக்கும். எல்லா வாங்குகளிலும் (இருவருக்கு ஒன்று வீதம்) மைக்கூடு வைப்பதற்கான துவாரம் இருக்கும். அந்த துவாரங்கள், மைக்கூடுகள் சரியாகப் பொருத்தக் கூடியதாக ஒரே அளவினதாக இருக்கும்.
வகுப்புத் தலைவர் உரிய இடம் சென்று மைக்கூடுகளை எடுத்து வந்து வாங்குத் துவாரங்களில் வைத்துவிடுவார். சிலபேர் வீட்டிலிருந்தும் மைக்கூடுகளை எடுத்து வருவர்.
சிவகுரு வித்தியாசாலை
அந்நாளில் சந்தியிலிருந்த அப்பு அண்ணாவின் மெத்தைக் கடையில் (“யானை நடந்த கதை” யில் சொல்லப்பட்ட அதே மெத்தைக் கடைதான்) 5 சதம் கொடுத்து 2 மைக் குளிசை வாங்கி, கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து விட்டால் – மைக் குளிசை கரைந்து – “மை” – ரெடியாகிவிடும். தரமான தொட்டெழுதும் பேனாக்களையும் அப்பு அண்ணா கடையிலேயே வாங்கிக் கொள்ளலாம். தடிப் பேனையில் பொருத்தப்பட்டிருக்கும் “G” நிப்புவிற்கு மவுசு அதிகம். “வாழைக்காய் நிப்” எனப்படும் இன்னொரு நிப்பும் பயன்பாட்டில் இருந்தது.
தடிப் பேனையைச் சுயமாகச் செய்யும் விற்பனர்களும் இருந்தார்கள். சின்னிவிரல் தடிப்பான ஆறு அங்குல நீளமளவிற்கு பூவரசம் தடியை வெட்டி – பட்டை நீக்கி – காயவிட்டு, ஒரு முனையை பக்குவமாக ½ அங்குலம் பிளந்து – அதனுள் “G” நிப்பைச் செருகி, நூலால் வரிந்து கட்டிவிட்டால், சொந்தத் தயாரிப்பில் தடிப்பேனை தயாராகி விடும்.
பாடசாலை செல்லும் அனைவரும் தடிப்பேனையை பக்குவமாக புத்தகத்துக்குள்ளேயே வைத்துக்கொள்வர். “மை ஒற்றுத் தாள்” தடிப்பேனையுடன் நெருங்கிய உறவுள்ளவர். எழுதி முடியும் பக்கத்தினை மை ஒற்றுத்தாளினால் உடனுக்குடன் ஒற்றி எடுக்காவிட்டால் எல்லா எழுத்துக்களும் ஒன்றாகச் சாம்பாராகிவிடும். தடிப்பேனையின் காலத்தில் சீருடைச் சங்கதிகள் எதுவுமில்லை. விரும்பிய உடையுடன் பாடசாலைகள் வருபவர்களே அதிகம். பலரும் வேட்டி – சேட்டுடன் பாடசாலைக்கு வருவதும் சாதாரணமானது. இந்த உடைகளில் “மை” ஊற்றிக் கொள்வது, மைக்கறை படிவது பெரும்பாலும் தினமும் நடப்பவை. அடுத்தவனின் கவலையீனமும் நமக்கு வினையாக வந்துசேரும். எப்படிப் பார்த்தாலும் வீட்டில் நமக்கு அடி
(தண்டனை) நிச்சயம்.
மைக்கறை படிந்த உடைகளை உடன் கழுவி, உலர்த்தி மறுநாள் பாடசாலைக்கு அதையே அணிந்துவரும் பலரை நாம் பார்த்திருக்கின்றோம்.
5 சதம்
எங்களது காலத்தில் பேனையினுள் மை நிரப்பி எழுதும் “ஊற்றுப் பேனா” வின்பயன்பாடு வந்துவிட்டது. தடிப்பேனையின் குழந்தையே “ஊற்றுப்பேனா”” ஆகும். “குமிழ் முனைப் பேனா” ஆகப் பிந்தியது. அது தடிப்பேனையின் பேரப்பிள்ளை.
தபாற்கந்தோரில் தடிப்பேனை
அம்மன் கோவிலடியில் தபாற்கந்தோர் இருந்தகாலம். (இது பற்றி “தட்டி பஸ்ஸும் மரப்பாலமும்” பழங்கதையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது). தபாற்கந்தோர் மேசையில் உயர்ந்த சாய்வான மேசை ஒன்றிருந்தது. மிகச் சாய்வான அந்த மேசையின் மேற்பக்கம் தட்டையாக இருக்கும். அதில் உள்ள ஒரு துவாரத்தில் ஒரு மைக்கூடும், அருகே பலமான ஒரு பகுதியில் தடிப்பேனையும் எப்போதும் இருக்கும். சாய்வுப் பகுதியின் கீழ் விளிம்பில் – தடிப்பேனை கீழே விழுந்து விடாமல் தடுக்க ஒரு தடையும் இருந்தது.
3 சதத்திற்கு ஒரு தபால் அட்டையை (Post card) வாங்கி, மையில் தொட்டு, தடிப்பேனையால் சுகவிபரம் எழுதி, எழுதிய மை உலரும் வரை “”ஊ ஊ’ என்று ஊதி உலர்த்தி, தபாற் பெட்டியில் போட்டவர்களை நாம் பார்த்திருக்கின்றோம்.
வங்கிப் பணப் பரிமாற்றம் பிரபலமாகாத காலம். தபாற்கந்தோர் மூலமாக காசுக் கட்டளை (Money order), தபாற்கட்டளை (Postal order) மூலம் கிடைக்கும் பணத்தினை பெற (தபாற் கந்தோர் அலுவலர் முன்பாக கையொப்பம் இடவேண்டிய கட்டாயமானது) தடிப்பேனையால் கையொப்பம் இட்டு பணம் பெற்றுக் கொண்ட அனுபவம் நமுக்கும் உண்டு. அந்த நாளைய அம்மாக்கள் பலருக்கும் உண்டு.
திரு.அப்பாத்துரை மாஸ்டர்
அங்குமிங்குமாக தபாற் கந்தோர் அல்லாடி, தற்பொழுது சில காலமாக யாழ் வீதியிலுள்ள அ.சிவிஷ்ணுசுந்தரத்தின் வீட்டில் (முற்பக்கம் இலங்கை வங்கி உள்ளது) தரித்தி நிற்பதைப் பார்த்திருப்பீர்கள்.
அங்கே மண்தரையில் – கறையான் அரித்து, கால் ஒன்று கட்டையாகி – யன்னலோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்த நிலையிலும் – உறுதி குன்றாமல் எழுதுவதற்குப் பயன்பட்டு வந்தது அந்த உயர்ந்த மேசை.
எப்படிப் பார்த்தாலும் இந்த மேசையின் வயது 80 ற்கும் மேலிருக்கும். கடந்த 2 மாதங்களாக அந்த இடத்தில் மேசையக் காணவில்லை.
“எங்கே” என விசாரித்தேன். அறை ஒன்றின் மூலையில் மேசை முடக்கப்பட்டிருப்பதைக் காட்டினார்கள்.
தடிப்பேனை – மைக்கூட்டுடன் தலைமுறை பல கண்ட அந்த மேசை தபாற்கந்தோர் ஓய்வூதியம் பெற்று, மூலையில் தூங்கிக்கிடப்பதை நீங்களும் பார்க்கலாம்.
குறிப்பு
இதுவரை இவரின் 12 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.