வாரம் ஒரு பழங்கதை – முருகையா மடமும் கத்தோக்கடியும் – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015 (திங்கட்கிழமை)
முருகையா மடம்
“ஆலடியும் சிவகுருவும்” என்னும் பழங்கதையில் “முருகையா மடமும் கத்தோக்கடியும்” பற்றிய தனிக்கதை பின்னர் தரப்படும் எனக் கூறியிருந்தேன். அம்பாள் கோயிலின் வடமேற்கு மூலையில் – வீதியின் வடக்காக – வாடி ஒழுங்கைக்குக் கிழக்காக இப்போது மோர் மடம் உள்ள இடமே பழைய “முருகையா மடம்” இருந்த இடமாகும்.
முருகையா மடம்
கிழக்கு மேற்காக நீண்ட மடம் இது. ஒரு விறாந்தை – ஒரு அடிவரை உயரமான திண்ணைப் பகுதி – திண்ணைப் பகுதியின் நடுவே ஒரு சிறிய அறை. மடத்தின் மேற்புற கூரைப்பகுதி அந்த நாளைய “பீலி” ஓடுகளால் வேயப்பட்டவை.
அளவில் சிறியதான இந்தப் பீலி ஓடுகளை மேற்புறம் குவிந்த படியும் – கீழ்ப்புறம் நிமிர்ந்த படியுமாக மாறி மாறி நெருக்கமாக அடுக்கி விட்டால் ஒரு சொட்டு மழைத் தண்ணீர் கூட கீழே சிந்தாது. உட்புறமும் குளிர்ச்சியாக இருக்கும்.
விறாந்தை நடுவே தெற்காக ஒரு அகன்ற வாசல், மேற்காக சிறிய வாசல் ஒன்று. விறாந்தைப் பகுதிகள் முழுவதும் மரக் கிறாதிகள் இருந்தமையால் குளு...... குளு...... என எந்த நேரமும் காற்றோட்டம் மிகுந்திருக்கும். மேற்புறத் திண்ணையில் தலைவைத்துப்படுக்க வசதியாக – தலையணை போன்ற அமைப்புக்கொண்ட திரட்டுக் காணப்பட்டது.
மாலை வேளைகளில் ஆலடிக்கும், கத்தோக்கடிக்கும் வரும் கிடுகு வண்டிகள் – விறகு வண்டில்கள் என வருபவர்கள் இந்த முருகையா மடத்திலேயே படுத்துறங்குவர். மறுநாள் காலை தமது வியாபாரத்தைத் தொடங்குவர்.
மடத்தின் நடுப்பகுதியில் மேற்திண்ணையில் உள்ள ஒரு சிறிய அறையில் “வேல்” வடிவில் முருகனை வைத்து பராமரித்து வந்தார் ஒருவர். ஏறக்குறைய செல்வச்சந்நிதி முருகனின் வடிவில் முருகனும், அதைச் சுற்றிலும் சிறிய வேல்களும் கொண்டு, அறை ஒரு தெய்வீகச் சூழலில் மிளிரும். தினமும் மாலை வேளையில் ஒரு நேரப் பூசை நடைபெறும்.
கத்தோக்கடி,இத்தி மரம் நிற்கும் இடம்
மோர் மடத்தின் பின்புறமாக வடகிழக்கு மூலையில் உள்ள முற்றுப் பெறாத 3 மாடிக் கட்டடத்தையும், வாடி ஒழுங்கையின் கிழக்கான பகுதியையும் உள்ளடக்கியதான பகுதியில், பெரியதொரு தாமரைக் குளம் இருந்தது. குளத்தில் நீக்கமற மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் பூசை வேளையில் வேலவனை அலங்கரிக்கும்.
முருகையா மடத்தின் காப்பாளர், பராபரிப்பாளர், ஐயர் எல்லாமே ஒருவர் தான். அவர்தான் மதவடியில் காலி கோவிலின் மேற்காக வசித்து வந்த செல்லச்சாமி என்பவர் ஆவார். இவர் “X” கதிர் தொழில் நுட்பவியலாளரான மோகனசுந்தரத்தின் தந்தையார் ஆவார். மெலிந்த தோற்றம், மாநிறம், தலையில் மிகச் சிறிய குடுமி, அரையில் காவி வேட்டி – இதுவே செல்லச்சாமியின் புறத் தோற்றம்.
முருகையா மடத்தின் விசேட அம்சமே “படிப்பு” த்தான். நமது கோவில்களில் வாசிக்கப்படும் “புராணபடண” வாசிப்பு போன்றது இது. மகாபாரதம், இராமயாணம், கந்தபுராணத்தின் முருகன் திருவிளையாடல்கள் ஆகியவை வாசிக்கப்படும். “படிப்பு” மாதக் கணக்கில் நீடிக்கும். பாரதத்தில் தருமர் பட்டாபிஷேகம், இராமாயாணத்தில் சீதா கல்யாணம், இராமர் பட்டாபிஷேகம், கந்தபுராணத்தில் தெய்வானை – வள்ளியம்மை திருமணப் படலங்கள் வருகின்ற வேளைகளில் “முருகையா மடம்” திருமண மண்டபம் போன்று அலங்காரம் பெறும்.
முருகையா மடத்தின் கிழக்குப் புறமாக வெளியே பெரிய பானையில் பொங்கப்படும் “சர்க்கரைப் பொங்கல்” முருகனுக்கு நிவேதிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும். நாமும் சுவையான பொங்கலுடன் வீடு திரும்புவோம்.
காலம் கடந்தது.... காட்சி மாறியது....... முருகையா மடமும் காணாமல் போனது முருகன் எங்கே சென்றார் என்பது எனக்குத் தெரியவில்லை.
கத்தோக்கடி
அம்மன் கோவிலின் பின்புறமாகவுள்ள கத்தோக்க மரம் தினமும் நமது பார்வையில் உள்ளது. உண்மையில் அந்த நாளைய கத்தோக்க மரம் 1980 – 1981 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கடுங்காற்று வீசிய ஒரு இரவு வேளையில் வேரோடு சாய்ந்து போனது. பின்னர் நாட்டப்பட்ட கத்தோக்க மரமே இன்று நம் கண்ணில்படும் இளமையான கத்தோக்காகும்.
கத்தோக்கடி
பழைய ஆலமரம் புயலோடு போக, புதிய ஆலமரக் கன்றினை நாட்டி வளர்த்தெடுத்த தணிகாசாலம் அண்ணையே இந்த புதிய கத்தோக்க மரத்தையும் நாட்டி பாதுகாத்து வளர்த்தெடுத்தார் என்பது உண்மை. தணிகாசலம் அண்ணையின் வீடு கத்தோக்கடிக்கு மிக அருகாமையில் இருந்தமையால் அவருக்கு அந்தக் கூடுதல் அக்கறை ஏற்பட்டிருக்கலாம்.
கத்தோகடிக்கு அண்மித்ததாக சிவன் கோவில் வடமேற்கு மூலையில், வடக்குப் பார்த்தபடி, எசமான் கிணற்றுக்கு மேற்காக இருந்தது “பலாவடி மடம்”. பலாவடி மடத்தின் பின் புறமாக சிவன் கோயிலின் பழைய எஞ்சின் கொட்டகை இருந்தது. எஞ்சின் கொட்டகைக்கும் பலாவடி மடத்திற்கும் இடையே மிகப் பெரிய ஒரு பலாமரம் கிளை பரப்பி உள்ளும் புறமுமாக வளர்ந்து மடத்தை மூடி வளர்ந்திருந்த காரணத்தால் இது “பலாவடி மரம்” எனப் பெயர்பெற்றது. இந்த மடமும் “பீலி” ஓடுகளாலேயே வேயப்பட்டிருந்தது.
உடுப்பிட்டியிலிருந்து புறப்படும் “ஒற்றைத் திருக்கல் வண்டி” பலாவடி மடத்தடியில் வந்து தரித்துநிற்கும். வெள்ளை வேஷ்டி – சால்வை நாசனலுடன் ஒரு முதியவர் வண்டியிலிருந்து இறங்குகின்றார். வண்டியின் உட்புறத்திலிருந்த சிறிய பெட்டகத்தை இறக்கி மடத்தில் வைத்துவிட்டு வண்டியைச் கத்தோக்கடிக்கு ஓட்டிச்சென்று நிறுத்துவார். மாட்டை அவிழ்த்து எசமான் கிணற்று நீர்த்தொட்டியில் தண்ணீர் காட்டி, வண்டியின் கீழ்புறத்தில் சாக்குப் படங்கினுள் தொங்கியபடியுள்ள வைக்கோலை உதறிப்போட்ட பின் பலாவடி மடத்திற்கு வந்துசேருவார்.
அம்பாள் பின் வீதியில் உள்ள இத்தி மரம்
மடத்தில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்க விட்டபடி, பெட்டகத்தின் முன்பாக கிழக்கு நோக்கியபடி அமர்ந்திருந்து தன் வேலையை ஆரம்பிப்பார். இவர் யார்?
அந்த நாளில் உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை பகுதிக்குப் பொதுவான திருமண – பிறப்பு – இறப்பு பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளர் “க.வீரவாகு” என்பவரே இவர் ஆவார். வரிசைக் கிரமமாக – மிகப் பவ்வியமாக காத்திருந்து பலரும் பதிவுகளை மேற்கொள்வர். பதிவு முடிந்தது.....காத்திருந்தவர்கள் நிம்மதியாக வீடு திரும்புவர்.
சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு பாடாசாலை மட்டத்தில் பல்வேறு தேவைகளுக்கும் பிறப்பு பத்திரம் தேவைப்படும் காலத்தில் பத்திரத்தை எடுத்துப் பார்த்தால் பல வினோதங்களைக் காணலாம். “பாலசேகரன்” எனச் சொல்லப்பட்ட பெயர் “பாலசேகரன்பிள்ளை” என “பிள்ளை” ஒன்று கூடவே சேர்ந்திருக்கும். “கலாராணி அம்மா” எனக் கூறப்பட்ட பெயரில் “அம்மா” போய் “கலாராணி” மட்டுமே மிகுதியாயிருக்கும். “வாமதேவன்” என்னும் பெயர் “வாசுதேவன்” என மாறியிருக்கும்.
இன்னொரு சுவையான சங்கதியைக் கூறுகின்றேன்.......... கேளுங்கள். பதிவாளர் வீரவாகு எழுதும் அத்தனை பத்திரங்களிலும் க், ந், ப், ம் போன்ற மெய் எழுத்துக்களுக்கு குற்றிடும் வழக்கம் இல்லை. நம்புவதற்கு கடினமாக உள்ளதா, சரி. உங்கள் வீட்டில் உள்ள பேரன், பேர்த்திமார்களை பேட்டி கண்டுபாருங்கள். அல்லது பழைய தோம்புகளை தூசு தட்டி எடுத்து பத்திரங்களைப் பாருங்கள். குற்றில்லாத பதிவுப் பத்திரங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.
வல்வையூர் அப்பாண்ணா
பலாவடி மடம் காலாத்தோடு கலந்து விட க.வீரவாகுவும் தன் அலுவலகத்தை மாற்றிக் கொண்டார்.
அம்பாள் பின் வீதியில் உள்ள (தற்போது) இத்தி மரம் நிற்கும் இடத்திக்கு மேற்காக இரண்டு கராஜ்கள் வடக்குப் பார்த்தபடி இருந்தன. மேற்காக சிவன் கோயில் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி அண்ணா தனது கருப்புநிற சோமசெற் காரை நிறுத்திக் கொள்வார்.
கிழக்காக இருந்த ஒரு அறையும் – விறாந்தையுமாக இருந்த பகுதியில் “பதிவாளர் - க.வீரவாகு எனப் பெயரிடப்பட்ட (பாதி புரிந்தும், பாதி புரியாமலும் இருந்த) அறிவித்தல் பலகை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதையே தனது பின்னாளைய பதிவிடமாகப் பயன்படுத்திக் கொண்டார் வீரவாகு ஐயர்.