வாரம் ஒரு பழங்கதை – கல்லும் சொல்லாதோ கதை – வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2015 (திங்கட்கிழமை)
இதுவும் ஒரு பழங்கதையே
அம்பாள் தேர்த் திருவிழாவன்று (03-05-2015), அம்பாள் வாசலில் வெளியான “ஜெக ஜோதி” என்னும் கைநூலில் உள்ள அப்பாண்ணாவின் “கல்லும் சொல்லாதோ கதை” என்னும் பழங்கதையை இவ்வாரம் தந்திருக்கின்றோம்.
-அம்பாளின் அனுக்கிரகம் அனைவருக்கும் கிட்டுவதாக –
ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் பழைய கோபுரம் இடிக்கப்பட்டு புதிய கோபுரம் ஒன்றைக் கட்டுவதற்கான தீர்மானம் 12 ஆம் திருவிழா உபயகாரர்களால் 1957 இல் எடுக்கப்பட்டது. தென் இந்திய திருக்கோயில் கோபுரங்களுக்கு ஒத்ததாக கோபுரம் சிறப்புற அமைய வேண்டும் என்பதில் 12 ஆம் திருவிழா உபயகாரர்கள் மிகவும் ஆர்வமாகச் செயல்பட்டனர்.
ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் பழைய கோபுரம்
அந்த வேளை கோயில் தர்மகர்த்தா சபைத்தலைவராக இருந்தவர் காலஞ்சென்ற வ.வ.இராமசாமிப்பிள்ளை அவர்கள் ஆவார். அவர் எல்லோராலும் மதிக்கப்படுகின்ற ஒரு பிரமுகராகவும், வர்த்தகராகவும், கப்பற்சொந்தக்காரராகவும் இருந்த காரணத்தால் கோபுரம் கட்டுவதற்கான திட்ட வரைபுகள் மளமளவென ஆரம்பமாகின.
வல்வெட்டிதுறைக் கரைக்கு அண்மித்த தமிழகத் துறைமுகங்களிலிருந்து கருங்கற்களும் வெண்கற்களும் கப்பல்கள் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முடக்கிவிடப்பட்டன.
பழைய கோபுரத்தினை இடித்து அப்புறப்பட்டுத்தும் வேலை ஆரம்பமாகியது. தங்கள் ஓய்வு நேரங்களில் கோபுர இடிப்பு வேலைகளில் ஈடுபட்ட 12 ஆம் திருவிழா உபயகாரர்களுடன் ஊர்ப் பொதுமக்களும் இணைந்து கொண்டனர். ஆள் அளவு உயரம் கொண்ட அலவாங்குகள், எடை கூடிய பெரிய சம்மட்டிகள், கடற்பாரைகள், பிக்கான் என பல்வேறு கனமான ஆயுதங்களைப் பாவித்து கோபுர இடிப்பு வேலைகள் இடம்பெற்றன.
அம்பிகை கோடியாக்கரையிலிருந்து வள்ளத்தில்
வந்து வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கும் காட்சி
செங்கல்லும் சுண்ணாம்பும் கலந்து கட்டப்படிருந்த பழைய கோபுரம் ஆனது உருக்குப் போன்று வைரம் பாய்ந்ததாக இருந்த காரணத்தால், கோபுரத்தை இடிக்கவும் இடித்த பகுதிகளை அப்புறப்படுத்தவுமே ஒரு வருடம் ஆகியது.
இந்த இடிப்பு வேலை நடந்து வந்த அதேவேளையில், வல்வைக்கு அண்மித்த தமிழகத் துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் ஏற்றப்பட்ட கருங்கற்களும், வெண்கற்களும் வந்திறங்கவேண்டிய நேரமும் வந்தது.
கற்களை ஏற்றிவரும் “டிங்கிகள்” நேராக உள்ளே வர வசதியாக வாடி ஒழுங்கைக்கு நேராக உள்ள “வான்” தோண்டப்பட்டு அகலமாக்கப்பட்டது. “வாடி வான்” ஊடாக உள்ளே வந்த டிங்கிகளிலிருந்து “செயின் புளோக்” மூலம் நீண்ட கருங்கற்களும் வெண்கற்களும் கடல்நீரில், கரையை அண்டி இறக்கப்பட்டன
ஒரே அளவான 5 அடி உயரம் கொண்ட பனைமரக்குற்றிகளில் ஒவ்வொன்றாக ஏற்றபட்டு, “ஏலோலோ” சொல்லி, வாடி ஒழுங்கை வழியாக நீண்ட கயிறுகள் கட்டி கற்கள் இழுத்துவரப்பட்டன.
முருகன் மண்டபம்
பொதுமக்களுடன் சேர்ந்து சிதம்பரக் கல்லூரி சிரேஷ்ட மாணவர்கள் காட்டிய பங்களிப்பும் பலராலும் போற்றப்பட்டது.
பலம் குறைந்த பிஞ்சுக்கைகளாயினும், பல நூறு கைகள் ஒன்று சேர்ந்து இந்த கைங்கரியத்தில் தொடர்ச்சியாக பல நாட்கள்
ஈடுபட்டனர். அனைவரது கூட்டுமுயற்சியினால் அனைத்து கற்களும் அம்பாள் கோவில் முன் வீதிவரை வந்துசேர்ந்தன.
தற்போதைய சப்பறக் கொட்டகை இருக்கும் இடத்தையும், அதன் பின்புறமான அந்த நாளைய “கந்தப்பர் வளவு” (இப்போது பிள்ளையார், முருகன் சித்திரத் தேர் உள்ள இடம்) என்று சொல்லப்பட்ட இடத்தையும் சேர்ந்ததாக நீளமான – உயரமான பதிவான – கிடுகுக் கொட்டைக்கைகள் போடப்படிருந்தன.
இந்தக் கொட்டைக்கைகளுக்கு உள்ளேயும் வெளியேயுமாக கற்களை பொழிந்து மெருகேற்றும் வேலைகள் ஆரம்பமாயின. உள் நாட்டிலுள்ள கோயில் கட்டுமானப் பணிகளில் அனுபவம் வாய்ந்த ஆசாரியர்கள் கற்பொழிவு வேலைகளுக்கு வேறாகவும், கோபுர கட்டுமானப்பணிகளுக்கு வேறாகவும் நியமிக்கப்பட்டனர்.
தற்போதைய கோபுரத்தின் நடுவேயுள்ள படிக்கல், நீண்டு உயர்ந்துள்ள ஒரே கல்லினாலான பக்கக் கற்கள் இரண்டு, இரண்டையும் இணைக்கும் மேல் விதானக்கல், கோபுரத்தைத் தாங்கியுள்ள மற்ற மேல் விதானக்கற்கள் ஆகியவை கருக்கல்லாகும்.
கணபதி மண்டபம்
பக்கக்கற்கள் இரண்டிலும் மேலேயுள்ள இணைப்பு கருங்கல்லிலும் செதுக்கப்பட்டுள்ள “பெண்ணும் செடியும்” அமைப்பு, செதுக்கப்பட்ட நிலையிலேயே கொண்டு வரப்பட்டது என்பது விசேட அம்சமாகும்.
முகப்பு 3 மண்டபங்களின் மேல்விதானத்தில் பரவப்பட்டுள்ள கற்கள் மற்றும் கோபுரத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஏனைய கற்களும் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு இங்கேயே பொழியப்பட்டவெண்கற்களாகும்.
கோபுரத்தின் இருபக்க கீழ் வேலைகளும், மேலாக 5 நிலைக் கோபுர கட்டுமானப்பணிகளும் நிறைவுபெற்றன. மாமல்லபுரம் போன்று சிற்பவேலைப்பாடுகளுக்கு பெயர்போன தென்னக சிற்ப ஆசாரியர்கள் பலர் இங்கு வந்து சேர்ந்ததும் சிற்பங்கள் வைக்கும் வேலைகள் ஆம்பமாகின.
கோபுரத்தின் மீது அந்தந்த இடங்களிலேயே வைத்து சீமெந்து – ஒட்டுச்சல்லி – செங்கற் துண்டுகள் ஆகியவற்றோடு சிற்பவேலைகளைச் செய்து முடிக்க 2 வருடங்கள் ஆனது.
அடுத்து கோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் வேலைகள் ஆரம்பமாகின. கோபுரத்திற்கு மை தீட்டும் வேலையையும், கோபுரத்திற்கு முன் உள்ள மூன்று மண்டப விதானங்களிலும் சித்திரங்கள் வரையும் பணியும் ஏக காலத்தில் நடந்தது.
ஓவியர்களுக்கு தலமை தாங்கி தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த நாராயணசாமி என்பவரே மண்டபச் சித்திரங்கள் வரையும் பணியினைச் செவ்வனே செய்து முடித்தார்.
இந்த ஓவியங்கள் வரையப்பட்ட விதமே தனித்துவமானது. மண்டப விதானங்களுக்கு கீழாக 3 அடி மட்டத்தில் “காவார்” கட்டி மேடு பள்ளம் இல்லாமல் பலகை பரவப்பட்டிருந்தது.
அந்த தட்டையான பகுதியில் (மல்லாக்காக) நிமிர்ந்தபடி, அந்த பருத்த உடலோடு நாராயணசாமி படுத்துக்கொண்டே சித்திரங்கள் வரைந்து முடித்தமை கண் முன்னே நிற்கின்றது. இவ்வாறாக மூன்று மண்டபங்களிலும் உள்ள அதி அற்புதமான ஓவியங்கள் அனைத்தையும் வரைந்து முடிய பல மாதங்கள் எடுத்தன.
இப்பொழுது மண்டபங்களை நிமிர்ந்து பாருங்கள். மையத்தில் பெரிய சந்திர வட்டக்கல் போன்ற அமைப்பு, அம்பிகை கோடியாக்கரையிலிருந்து வள்ளத்தில் வருவது, ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்து கொள்வது – பிற்காலத்தில் எழுப்பப்பட்ட கோயில் இவ்வாறாகவுள்ளது.
நடு மண்டபத்து ஓவியங்கள் கணபதி மண்டபத்தில் ஆவிரன் சம்ஹாரம், சர்ப்பத்தைக் கிழித்து வெளியே வரும் கணபதி, சித்தி புத்திகளுடன் கணபதி, பிரம்மா தேவரின் படைப்பில் கணபதி என இன்னும் பலதும்உள்ளன.
முருகன் மண்டபத்தில், ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று, ஈசனுடன் ஞானமொழி பேசு முகமொன்று, கூறும் அடியார்கள் தீர்க்கும் வினை ஒன்று, குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகமொன்று, வள்ளியை மணம் புணர வந்த முகமொன்று, – இவ்வாறாக சித்திரங்கள் ஜொலிக்கின்றன.
பெண்ணும் செடியும்
எதிர்பார்க்கப்பட்ட கால அளவை விட கூடுதல் காலம் எடுத்த போதிலும் கோயில் கோபுர வேலைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு 20.01.1967 இல் மகா கும்பாவிஷேகம் இனிதே நடந்தேறியது.
முன் மண்டபங்களின் மேல் விழுகின்ற கூடுதல் வெப்பம் காரணமாக, நாளாக நாளாக இந்தச் சித்திரங்கள் சோபை இழந்து வருவது அவதானிக்கப்பட்டது. இதனால் இடைக்காலத்தில் மண்டபங்களுக்கு மேலாக அஸ்பெஸ்டர்ஸ் ஸீற்றுக்களால் கூரையிடப்பட்ட போதும் பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் மேலும் சித்திரங்கள் சேதமடைந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
பின்னாளில் பொறுப்பு வகித்த பல கோவில் தர்மகர்த்தா சபையினரும் “இந்த ஓவியங்களை மீண்டும் புனரமைக்க முடியுமா? என்பது குறித்து பலரையும் அழைத்து வந்து ஆய்வு செய்தனர். அனைவரும் கூறிய ஒரே மாதிரியான பதில் இது.
“சித்திரம் வரைய பயன்படுத்தப்பட்டிருக்கும் வர்ணக்கலவைகள் தனித்துவமானவை. இந்த வர்ணக் கலவைகளை இப்போது பெற்றுக்கொள்வது சாத்தியமேயில்லை. அடுத்தது மல்லாக்கப்படுத்தபடி வரையப்பட்டஇந்த அழகு ஓவியங்களை தாம் நிமிர்ந்த படி வரைந்து முடிப்பது முடியாத காரியம்” என்பதாகும்.
அம்மன், சிவன் கோயில்களின் வாசல்களில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் பாதுக்கக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, 01.01.2011 இல் உதயன் பத்திரிக்கையில் “வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் சிவன் தேவஸ்தானங்களுக்கு ஒரு பகிரங்க விண்ணப்பம்” என்னும் தலைப்பிட்டு செல்வன் ப.திருக்குமாரன் என்பவர் ஒரு பணிவான வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.
இவர் யாழ் பல்கலை கழக தொல்பொருட்த்துறை சித்திரப்பிரிவின் நாலாம் ஆண்டு மாணவர் ஆவார். இந்த மாணவன் தனது இறுதி ஆண்டு ஆய்வு கட்டுரைக்காக எடுத்திருந்த விடயம் “50 வருடங்களிற்கு முற்பட்ட சுவரோவியங்கள்” என்ற தலைப்பில் “அம்மன் சிவன்” இரண்டு கோயில் கோபுரங்களின் கீழுள்ள சித்திரங்கள் பற்றியதாகவே அமைந்திந்தது.
வல்வையூர் அப்பாண்ணா
செல்வன் ப.திருக்குமாரன் உதயன் பத்திரிகைக்கு எழுதிய பகிரங்க விண்ணப்பத்தின் கடைசிப் பகுதி இது.
“காணவும் பேணவும்” எம்மிடம் உள்ள சிலவற்றில் தங்கள் சுவரோவியங்களும் அமைந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஓவிய பாரம்பரியத்தை எதிர்காலத்திற்கு வழங்கும் அரிய வேலையை தாங்கள் செய்வீர்களா?”
இந்த முகம் தெரியாத மாணவனின் கேள்வி பிறந்து 14 ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை நாம் ஏதாவது முயற்சித்தோமா? இல்லையாயின் இனிமேலாவது இது பற்றி சற்று சிந்திபோமே?..
வல்வையூர் அப்பாண்ணா
குறிப்பு
இதுவரை இவரின் 8 ஆக்கங்கள் எமது இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளன.